தமிழ்த்துறை கல்வி சுற்றுலா – கீழடி – திருமலை நாயக்கர் அரண்மனை
தமிழ்த்துறை கல்வி சுற்றுலா
புத்தகத்தின் வழி, கற்பதை காட்டிலும் செயல்வழியில் மாணவர்கள் கற்கும் பொழுது அவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கின்றது. அதன் வகையில் மாணவர்களைக் கல்வி சார்ந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று அவ்விடங்களை நேரில் கண்டு தாங்கள் புத்தகத்தில் படித்ததை நேரில் பார்க்கும் பொழுது அவர்கள் மனதில் பசுமரத்தாணி போல அக்காட்சிகள் பதிவாகின்றன. தமிழ்த்துறை சார்பாக 06.09.2025 அன்று கீழடி மற்றும் திருமலை நாயக்கர் அரண்மனைக்கு கல்விசார் சுற்றுலாவாக மாணவிகளை அழைத்துச் சென்றனர்.
கீழடி
சங்க கால மக்களின் வாழ்வியலை சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. அம்மக்களின் வாழ்வியலை இலக்கியங்களில் வழி அறிந்த நாம் அவர்களின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும், பயன்படுத்திய பொருட்களையும் நேரடி சான்றுகளாக காண்பதற்கு கீழடி அருங்காட்சியம் ஒரு பெரிய வாய்ப்பாக அமைகின்றது. நம் முன்னோர்களின் வாழ்வியல் முறைகள்,அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், அணிகலன்கள், தமிழி எழுத்துக்கள், நடுகற்கள் போன்றவைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றை மாணவிகள் ஆர்வமுடன் கண்டு பார்வையிட்டனர்.
திருமலை நாயக்கர் அரண்மனை
தமிழக வரலாற்றில் நாயக்கர்களின் ஆட்சி மறக்க முடியாத ஒன்று. அதில் நாயக்க வம்சத்தின் திறமை வாய்ந்த அரசராகவும் இன்றளவும் நாம் நினைவில் கொள்ளக்கூடிய ஒருவர் திருமலை நாயக்கர். திருச்சியில் இருந்து மதுரைக்கு தலைநகரை மாற்றியவுடன் தனக்கென அங்கு ஒரு பெரிய அரண்மனையை கட்டினார். அதுவே திருமலை நாயக்கர் மஹால். பிரம்மாண்டமும், அழகும், கலை நுட்பமும், தொழில்நுட்பமும் வாய்ந்த ஒரு மிகச்சிறந்த கட்டடம். அதன் மிகப்பெரிய தூண்களும், ஓவியங்களும், நுணுக்கமான வேலைப்பாடுகளும் காண்போரை வியப்படைய செய்யும் வகையில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. அதை மாணவியர்கள் ஆர்வமுடன் கண்டனர்.
கற்றலின் பயன்
கீழடி மற்றும் திருமலை நாயக்கரின் அரண்மனை ஆகியவற்றை மாணவிகள் கண்டு, கற்றலின் வழி அவர்கள் நாயக்கர் கால ஆட்சியில் அவர்களுடைய செல்வ செழிப்பு அவருடைய ஆட்சித் திறமை இவற்றை படித்து அவர்கள் ஆண்ட முறையினை அந்த அரண்மனையின் வழி அவர்கள் அறிந்து கொண்டனர். சங்க இலக்கிய காட்சிகளை நேரடியாக அவர்களுடைய பொருட்கள் சங்ககால மக்களின் வாழ்வியல் எவ்வாறு இருந்தது என்பதை படம் பிடித்து காட்டுகின்றது. சங்க இலக்கியம் புனைவு இலக்கியம் அல்ல அது ஒரு வாழ்வியல் இலக்கியம் என்பதை அச்சான்றுகள் வழி மாணவிகள் அறிந்து கொண்டனர்.
